

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், உதகை வண்டிசோலையில் ஒரு திருமணம் எளிமையாக உறவினர்கள் சிலர் முன்னிலையில் நடைபெற்றது.
கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதுமாக வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருமணம், நிச்சயதார்த்தம், திறப்பு விழாக்கள் போன்ற சுபகாரியங்கள் அதிக கூட்டம் கூட்டாமல் சில நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் மட்டும் நடத்தப்பட்டன. உதகை அருகேயுள்ள வண்டிசோலை அருள்மிகு நாராயணன் கோயிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த 9 பேர் மட்டும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மணப்பெண் ஜெயநந்தினி (26) கூறும்போது, "கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டு இன்று மண்டபத்தில் திருமணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 500 பேருக்கும் மேல் அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கி கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைக்காக அதிகாலை 4 மணிக்குக் கோயிலில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்" என்றார்.