

கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரையாவது ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், இன்று (மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, இன்று தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள், பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இன்று இரவு 9 மணிக்கு நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 22) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இம்மாதம் 31 ஆம் தேதி வரை அனைத்துப் பயணிகள் ரயில் சேவைகளும், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கரோனா தடுப்புக்கான ரயில்வே துறையின் சிறப்பான பங்களிப்பு இது. பாராட்டத்தக்கது!
தமிழ்நாட்டில் முழு அடைப்பு மற்றும் மக்கள் ஊரடங்கு நாளை அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது நல்ல நோக்கத்தினாலான நடவடிக்கை. ஆனால், போதுமானதல்ல. முதல்கட்டமாக குறைந்தபட்சம் மார்ச் 31-ம் தேதி வரையாவது ஊரடங்கை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்!
கரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தமிழகத்திலும் கரோனாவைத் தடுக்க வரும் 31-ம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய அரசு அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.