

நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை அண்டை மாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் மக்கள் இன்று (மார்ச் 22) ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி வருகின்றனர்.
புதுச்சேரியிலும் 100 சதவீத மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றும், பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
வீட்டில் இருந்துகொண்டே காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அங்குள்ள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து, உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில், தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "வரும் 31-ம் தேதி வரை அத்தியாவசியத் தேவைகளின்றி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க புதுச்சேரிக்கு 300 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். .நாளை முதல் 31-ம் தேதி வரை அண்டை மாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.