

கரோனா வைரஸால் இந்தியா 5-வது உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 63 வயது முதியவர் கரோனா வைரஸால் உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை இது 2-வது உயிரிழப்பாகும்.
சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் உலகையே சுற்றி அடிக்கிறது. இதுவரை உலகில் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை நகரில் 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், “ கரோனா வைரஸால் உயிரிழந்த அந்த முதியவருக்கு ஏற்கெனவே நீரிழிவுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை இருந்தன. கரோனா வைரஸால் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லமல் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 10 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மும்பையில் 6 பேர், புனேவில் 4 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.