

இன்றைய ஊரடங்கு நல்ல தொடக்கம் எனவும், நமக்குத் தேவை மூன்று வார ஊரடங்கு எனவும், பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (மார்ச் 22) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படும் மக்கள் ஊரடங்குக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் மக்களுக்கு உள்ள அக்கறையை இது காட்டுகிறது. மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா பரவலைத் தடுக்க இரவும், பகலுமாக உழைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாலை 5 மணிக்கு கைகளைத் தட்டி நன்றி தெரிவிப்போம்.
கரோனா வைரஸின் கொடிய தன்மை குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்தும் விளக்கி, அதைத் தடுக்க இந்தியா முழுவதும் மூன்று வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன் நான் ஆலோசனை தெரிவித்திருந்தேன்.
ஆனால், அப்போது கரோனாவின் பாதிப்புகள் குறித்த அறியாமை காரணமாக, இவ்வளவு கடுமையான நடவடிக்கை தேவையா? என்று தயங்கியோர் கூட, ஊரடங்கை ஆதரிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். பிரதமர் அழைப்பு விடுத்த மக்கள் ஊரடங்குக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு இதைத் தான் காட்டுகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி அரசும் கரோனா வைரஸ் பாதிப்பின் விளைவுகளை உணர்ந்து வரும் 31-ம் தேதி வரை, காலையிலும், மாலையிலும் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கான சில மணி நேரம் இடைவெளி தவிர, அனைத்துப் பகுதிகளிலும்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையைப் பொறுத்து அடுத்த மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கவும் புதுச்சேரி அரசு தயாராக இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் 40% மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் 29-ம் தேதி வரை ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, பிஹார் ஆகிய மாநிலங்களில் 31-ம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்திலும் அண்டை மாநிலங்களின் எல்லைகள் மூடல், போக்குவரத்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை வரவேற்கப்பட வேண்டியவைதான் என்றாலும் கூட, இன்றைய சூழலுக்குப் போதுமானவை அல்ல.
கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படாத நாடு என்று கூறப்பட்ட இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 61 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மூவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் நேற்று மட்டும் 12 பேருக்கு கரோனா தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.
அநேகமாக நாளைக்குள் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 500-ஐக் கடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் இந்தியா ஆபத்தான நிலையை நோக்கிப் பயணிக்கிறது என்று பொருள்.
கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் நோக்குடன் வெளியுலகத்துடனான தொடர்புகளை இந்தியா இன்று முதல் முற்றிலுமாக துண்டித்துக் கொண்டிருக்கிறது. இன்று முதல் 29 ஆம் தேதி வரை இந்தியாவுக்குள் பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கரோனா பாதிப்புடன் வெளியிலிருந்து எவரும் இந்தியாவுக்குள் வருவது தடுக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து ஏற்கெனவே கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இந்தியா வந்தவர்கள், அவர்களுடன் நெருங்கிப் பழகியதால் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே 67 பேர் இப்பட்டியலில் உள்ளனர்.
இவர்களுடன் கரோனா பாதிப்பு முடிந்துவிட்டால், இந்தியாவில் கரோனா பேரழிவு நிகழாமல் தடுத்துவிட முடியும். இதுதான் அனைவரின் விருப்பமுமாகும்.
மாறாக, கரோனா பாதிப்பு கண்டறியப்படாத எவரேனும், அவர்களையும் அறியாமல் மக்களுடன் ஊடுருவி, கரோனா வைரஸை பரப்பத் தொடங்கினால் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமடைந்து விடும். அதைத் தடுப்பதற்காகத்தான் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு மேலாக வலியுறுத்தி வருகிறேன்.
இதில் உள்ள நியாயத்தை, இதன் தேவையை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்திருக்கின்றன. ஆனாலும், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்த தயங்குகின்றன.
இந்தியா முழுவதும் இன்று ஊரடங்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையே மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கும் போது, சில இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகவே, இன்றைய ஊரடங்கை நல்ல தொடக்கமாக வைத்துக்கொண்டு 3 வாரங்களுக்கு ஊரடங்கைச் செயல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அது தான் இந்தியாவின் இன்றைய அவசர, அவசியமான காரியமாகும்.
தனித்திருப்போம்... தவிர்த்திருப்போம்... விழித்திருப்போம்... வைரஸைத் தடுப்போம்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.