

அத்தியாவசியப் பணியில் இருக்கும் ஊழியர்களைத் தவிர வீட்டை விட்டு யாரும் மக்கள் வெளியே வராத வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் பாதிப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரதமா் மோடி இன்று (மாா்ச் 22) ஒருநாள் மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை வி்ட்டு வராமல் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடந்த 19-ம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தை தவிா்க்குமாறும், பதற்றத்தில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டாா்.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த அறிவிப்பின்படி 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து மக்களும் ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் யாரும் வெளியே வராம் அதிகாரிகள் கவனிக்க வேண்டும். அத்தியாவசிய சேவையில் இருக்கும் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் வெளியே வராதவாறு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா வைரஸைத் தடுக்கும் சேவையில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் வீட்டில் கைதட்ட வேண்டும் அல்லது மணிகளை ஒலிக்கவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மக்கள் ஊரடங்கு தொடங்கிவிட்டது. மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கை மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அனைத்து மக்களும் இந்த மக்கள் ஊரடங்கில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். கரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைத்து, நம்முடைய தேசத்தை மிகப்பெரிய தொற்று நோயிலிருந்து காக்க வேண்டும். அதற்கு சமூக இடைவெளியையும், சுய தனிமையும் அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.