

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இன்று ஒருநாள் மக்கள் ஊடரங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில், கரோனா வைரஸுக்கு எதிரான நமது போர் வெற்றி பெறட்டும்,வீட்டுக்குள்ளே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் பாதிப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரதமா் மோடி இன்று (மாா்ச் 22) ஒருநாள் மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை வி்ட்டு வராமல் மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று கடந்த 19-ம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தை தவிா்க்குமாறும், பதற்றத்தில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டாா்.
அதுமட்டுமல்லமல் கரோனா வைரஸைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், விமானப் பணியாளா்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் உழைப்பை போற்றும் வகையில் இன்று மாலை 5 மணியளவில் மக்கள் கைகளைத் தட்ட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி அறிவித்தபடி மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு தொடங்கிவிட்டது. அதற்கு முன்னதாக பிரமதர்மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ இன்னும் சில நிமிடங்களில் மக்கள் ஊரடங்கு தொடங்கப்போகிறது.
இந்த ஊரடங்கில் அனைவரும் பங்கேற்று, நம்முடையை வலிமையை, ஒற்றுமையை வெளிப்படுத்தி, கரோனா வைரஸை எதிர்த்து போராடி வெல்ல வேண்டும். கரோனா வைரஸை எதிர்க்கொள்ள இப்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் உதவும். மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் “ எனத் தெரிவித்துள்ளார்