

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஆன்லைன் மூலம் சூழலியல் ஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ், உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி பெரும்பாலான நாடுகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, வகுப்பறையில் இருந்து வெளியே வந்து காலநிலை மாற்றத்துக்கு எதிராகச் சிறுவர்கள் போராடினர். கரோனா வந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஸ்வீடன் சிறுமியும் பிரபல சூழலியல் ஆர்வலருமான கிரேட்டா துன்பர்க் இதை அறிவித்துள்ளார்.
ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர் என்னும் அமைப்பு, வெள்ளிக்கிழமைகளில் இணையவழிக் கருத்தரங்குகளை நடத்த ஆரம்பித்துள்ளது. நிபுணர்கள் மற்றும் ஆர்வம் கொண்ட மக்கள் இதற்கான வகுப்புகளை இளைஞர்களுக்கு எடுப்பர். இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) பேசிய கிரேட்டா, ''நம்முடைய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் இதுவொரு நல்ல சந்தர்ப்பம்'' என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வாராந்திர பள்ளிப் போராட்டங்கள் #ClimateStrikeOnline என்ற ஹேஷ்டேகில் பகிரப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பெல்ஜியத்தில் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னால், 4000 போராட்டக்காரர்களுடன் காலநிலை மாற்றம் குறித்து கிரேட்டா பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.