Last Updated : 21 Mar, 2020 05:17 PM

 

Published : 21 Mar 2020 05:17 PM
Last Updated : 21 Mar 2020 05:17 PM

'தனிமை' முத்திரையுடன் பயணம் செய்த தம்பதியர் வெளியேற்றம்: அவசியமற்ற பயணங்களை தவிருங்கள்; ரயில்வே துறை வலியுறுத்தல்

தனிமைப்படுத்தப்பட்ட முத்திரையுடன் டெல்லிக்குப் பயணம் செய்த தம்பதியர், ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இந்திய ரயில்வே துறை அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத் தகவலின்படி சந்தேகத்திற்கிடமானவர்கள் மற்றும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதிப்பட்டவர்கள் என்று அறியப்பட்டவர்களோடு தொடர்பு கொண்ட வகையில் 271 நபர்களுக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார்.

சமீபத்தில் கரோனா பாதிப்பு குறித்த சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியில் நடமாடுவது தெரியவந்துள்ளது. அவர்கள் ரயிலில் பயணம் செய்தபோது வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதனையடுத்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பவர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் சக குடிமக்களின் பாதுகாப்புக்காக பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய ரயில்வே வலியுறுத்தியது.

இதுகுறித்து இன்று ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''டெல்லியைச் சேர்ந்த தம்பதியர் சனிக்கிழமை காலை பெங்களூரு சிட்டி-புதுடெல்லி ராஜதானியில் ஏறினர். காலை 9:45 மணிக்கு ரயில் தெலங்கானாவில் காசிப்பேட்டை அடைந்தபோது, ஒரு சக பயணி தம்பதியரிடம் தனிமைப்படுத்தப்பட்ட அடையாளம் இருப்பதைக் கவனித்தார். கணவரிடம் சந்தேகத்திற்குரிய கரோனா வைரஸ் நோய் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டதற்கான முத்திரையை அதிகாரிகள் வைத்துள்ளதை பயணிகள் கவனித்தனர். மனைவிக்கும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான முத்திரை இருந்தது.

பின்னர் அவர்களது சக பயணிகள் ரயிலில் இருந்த ரயில்வே துறை அதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர். ரயில் உடனே நிறுத்தப்பட்டு, தம்பதியர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தம்பதியர் வந்த பெட்டி காசிப்பேட் நகரில் நிறுத்தி முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு பூட்டப்பட்டது. ரயிலில் போடப்பட்டிருந்த குளிர்சாதன வசதியும் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜதானி ரயில் காலை 11.30 மணிக்கு டெல்லியை நோக்கிப் புறப்பட்டது.

இதுபோல இன்னும் இரண்டு நிகழ்வுகளிலும் வைரஸ் நோய் சந்தேகத்தில் 12 பேர் தனிமை முத்திரையிடப்பட்டவர்கள் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் உடனே அவர்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அவர்கள் கடந்த வாரம் துபாயிலிருந்து இந்தியா வந்தவர்கள். தேவையான நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது,

இது தவிர, கடந்த மார்ச் 13-ம் தேதி அன்று டெல்லியில் இருந்து ராமகுண்டம் வரை ஏபி சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 8 பயணிகள் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களிடம் நேற்று பரிசோதனை செய்ததில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சக மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைவரும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x