

இத்தாலியில் நடந்தது நமக்கு வேண்டாம்; ஊரடங்கிற்கு ஒத்துழையுங்கள் என்று ரஜினி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போது 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.
மேலும் மார் 22-ம் தேதி சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆகையால் அன்றைய தினம் பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள் என எதுவும் ஓடாது என அறிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
தற்போது கரோனா வைரஸால் இத்தாலியில் நடந்த பாதிப்பு நமக்கும் வந்துவிடக் கூடாது. ஆகையால் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ரஜினி வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-ம் நிலையில் உள்ளது. அது 3-ம் நிலைக்குப் போய்விடக் கூடாது. வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3-ம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேமாதிரி இத்தாலி நாட்டில் கரோனா வைரஸ் 2-ம் நிலையில் இருக்கும்போது, மக்களை அரசாங்கம் எச்சரித்தது. அந்த ஊரடங்கு உத்தரவிற்கு அழைப்பு கொடுத்தது. ஆனால், அங்குள்ள மக்கள் அதை உதாசீனப்படுத்திவிட்டார்கள். அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகிவிட்டன. அதே மாதிரி நிலை நம் இந்தியாவில் வரக் கூடாது. ஆகவே இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவருமே 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.
இந்த கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் அவர்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக பிரதமர் சொன்ன மாதிரி 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அவர்களை மனதாரப் பாராட்டுவோம். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்”.
இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.