

கரோனா வைரஸால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தினக்கூலி ஊழியர்கள், கட்டிடத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதற்கிடையே கரோனா வைரஸ் காரணமாக வேலை இல்லாத ஊழியர்களுக்கு 80 சதவீத ஊதியம் வழங்கப்படும் என்று யுகே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேரளாவில் ரேஷன் பொருட்கள், நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பேசும்போது, ''15 லட்சம் தினக்கூலி ஊழியர்களுக்கும், 20.37 லட்சம் கட்டிடத் தொழிலாளர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும்.
பிரதமர் கூறிய மக்கள் ஊரடங்கை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும். இதை முன்னிட்டு நாளை மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்காது.
மாநிலத்தில் போதிய அளவு மருந்துகளும் நிவாரணப் பொருட்களும் கையிருப்பில் உள்ளன. உ.பி.யில் 23 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர். நம்மிடம் போதிய அளவு தனிமைப்படுத்தல் மையங்கள் உள்ளன. மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.