Published : 21 Mar 2020 02:34 PM
Last Updated : 21 Mar 2020 02:34 PM

கரோனா: தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.60 கோடி ஒதுக்கீடு போதுமானதா? - பேரவையில் ஸ்டாலின் கேள்வி

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு போதுமா, என தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 21), சட்டப்பேரவையில் பேசியதாவது:

"ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 741 பேருக்கு மட்டுமே கரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். அதேபோல் கண்காணிப்பில் 4,253 பேர் இருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார். அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டிருக்கிறதா இல்லையா?

படுக்கைகள் 1,120 மட்டுமே இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 32 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கரோனா பாதிப்பு 3 பேருக்கு மட்டுமே இருப்பதாகவும், 27 பேருக்கு இன்னும் சோதனை முடிவு வர வேண்டியுள்ளது என்றும் சொல்லி இருக்கிறார்.

தற்போது கரோனா பாதிப்புக்குள்ளான 3 பேரின் நிலை என்ன? அதில் இரண்டாவதாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவர்களின் நிலை எப்படி இருக்கிறது? அவருடன் பயணித்த, தொடர்பில் இருந்த அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்களா என்ற விவரத்தை அமைச்சர் இந்த அவையில் தெரிவிக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறியும் சோதனை குறைவானதாக இருக்கிறது என்ற ஒரு கருத்து இருக்கிறது. அனைவரும் சோதனை செய்யப்படுகிறார்களா என்ற உண்மை நிலையை இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும். வருமுன் காக்கும் திட்டத்தின் அடிப்படையில், அந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக, தமிழகத்தில் முழு அளவிலான ஐசியுக்கள் எத்தனை உள்ளன?

கரோனா பாதிப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அது மாவட்ட வாரியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறதா?

பரிசோதனைக்காக பயன்படுத்தும் டிபிஐ கிட்ஸ் 40 ஆயிரம் வாங்கப் போவதாக தமிழக அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த எண்ணிக்கை போதுமா? அதை அதிகம் கொள்முதல் செய்வதிலே என்ன சங்கடம் இருக்கிறது?

இப்போதுள்ள சாம்பிள்களில் எத்தனை ஆய்வகங்களில் நாம் எவ்வளவு பரிசோதிக்க முடியும்? அந்த வசதியை அதிகரிக்க அரசு ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறதா?

கரோனாவால் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படுவதால் வென்டிலேட்டர் வசதி உள்ள படுக்கைகள் உள்ள மருத்துவமனைகள் எத்தனை? வென்டிலேட்டர் படுக்கை உள்ள வசதிகளை மாவட்டந்தோறும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கெனவே இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசின் சார்பில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு போதுமா? என்னைக் கேட்டால் அதற்காக இன்னும் 500 அல்லது 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினால் கூட தவறில்லை என்று கருதுகிறேன்.

முழு வசதிகளோடு ஐசியு செயல்பட, வென்டிலேட்டர்கள், டிபிஐ கிட்ஸ்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்கு அரசு முன்வருமா?"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x