

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்களும் மார்ச் 23-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 3-ம் தேதி வரை முழுமையாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்களும் மார்ச் 23-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 3-ம் தேதி வரை முழுமையாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் சமூக இடைவெளி பரவலைத் தடுப்பது அவசியம் என்பதால், காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறி உள்ளவர்கள் பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையங்கள் அல்லது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மிக அவசரத் தேவை உள்ளவர்கள் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு ஏப்ரல் 3-ம் தேதிக்கு முன்னர் வரலாம். பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வருமாறு ஏற்கெனவே அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்கு பின்னர் தங்களது வருகையை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாற்றியமைத்தலுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.
அண்ணா சாலை, சென்னையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரவேண்டியவர்களும் தங்களது வருகையை ஏப்ரல் 3-ம் தேதிக்குப் பின்னர் ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு: 044-28513639, 044-28513640
மெயில்: rpo.chennai@mea.gov.in
இதனால் ஏற்படும் சிரமத்துக்கு வருந்துகிறோம்''.
இவ்வாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.