Published : 21 Mar 2020 12:41 PM
Last Updated : 21 Mar 2020 12:41 PM

இந்தியாவில் 2 நாட்களில் 113 பேருக்கு கரோனா; மக்கள் ஊரடங்கை 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அன்புமணி

இந்தியாவில் கடந்த 2 நாட்களில் 113 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (மார்ச் 21) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் கடந்த இரு நாட்களில் மட்டும் 113 பேரை புதிதாக தாக்கியிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதன் தீவிரத்தை அரசுகள் உணர வேண்டும்.

சீனாவில் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. சீனாவில் கரோனா நோய் தோன்றிய வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்து கேரளம் திரும்பிய மாணவி ஒருவர்தான் இந்தியாவில் முதல் கரோனா வைரஸ் நோயாளி ஆவார்.

அதன்பிறகும் கரோனா வைரஸ் இந்தியாவில் அவ்வளவு வேகமாகப் பரவவில்லை. மார்ச் 3-ம் தேதி வரையிலான 33 நாட்களில் இந்தியாவில் மொத்தம் 9 பேர் என்ற ஒற்றை இலக்கத்தில்தான் கரோனா பாதிப்பு இருந்தது. அதன்பின் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய கரோனா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 171 பேரைத் தாக்கியுள்ளது.

கடந்த 18-ம் தேதி 158 ஆக இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றிரவு 271 ஆக அதிகரித்துள்ளது. 19, 20 ஆகிய இரு நாட்களில் மட்டும் 113 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதிலிருந்தே அந்த நோய் எவ்வளவு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரளத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 63 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி தமக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரிவதற்கு முன் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அவர்களில் துஷ்யந்த் சிங் என்ற மக்களவை உறுப்பினர் நாடாளுமன்ற அலுவல்களிலும், குடியரசுத் தலைவர் மாளிகையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதனால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கும் நோய்த்தொற்று இருக்குமோ? என்ற எண்ணத்தில் அவர்களுக்கு கரோனா ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வெறும் 10 பேர் மட்டுமே என்று தமிழக அரசால் கூறப்பட்டது.

ஆனால், இப்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 257 பேர் என்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நபர்களுடன் தொடர்பில் இருந்தனரா? என்பது தெரியவில்லை. கரோனா பாதித்தவர்கள் தங்களை அறியாமலேயே நோயை எவ்வாறு பரப்பக்கூடும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இத்தகைய பாதிப்பைத் தடுப்பதற்காகவே 3 வார ஊரடங்கை பாமக வலியுறுத்துகிறது.

உள்நாட்டு நிலைமை இவ்வாறு இருந்தால், உலக நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. தொடக்க நிலையிலேயே கரோனாவை தடுக்கத் தவறிய இத்தாலியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,050 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் இத்தாலியில் கரோனாவுக்கு 627 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்குள்ள கோடிக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, இத்தாலி போன்ற மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ள நாடுகளிலேயே நிலைமை சமாளிக்க முடியாத சூழலில், இந்தியாவில் கரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்காவிட்டால், எத்தகைய நிலைமை ஏற்படும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே பெரும் அச்சமாக உள்ளது.

அதனால் தான் வந்த பின் வருந்துவதை விட, வருமுன் காப்போம் என்ற எண்ணத்தில் இந்தியாவில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

தமிழ்நாடு அதன் அண்டை மாநிலங்களுடனான எல்லைகளை மூடியிருப்பதும், பிரதமர் அழைப்பு விடுத்த மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. இதையே அடுத்த 3 வாரங்களுக்கு நீட்டிப்பது உள்ளிட்ட கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்; பொதுமக்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x