

தமிழகம் முழுவதும் நாளை போட்டோ ஸ்டுடியோ மற்றும் லேப்களை மூட வேண்டும் என தமிழ்நாடு வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிவக்குமார் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி, இந்நோய் தடுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளின்படி, நாளை (மார்ச் 22), ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டோ ஸ்டுடியோக்கள், வீடியோ எடிட்டிங் நிறுவனங்கள் மற்றும் கலர் லேப்கள் ஆகியவற்றை நாளை ஒருநாள் முழுவதும் மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என சிவக்குமார் தெரிவித்துள்ளார்.