

தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவித் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 21) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸைக் கட்டுப்படுத்திடவும், முற்றாக ஒழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்திற்கும், பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர், வழங்கிட வேண்டும்.
கரோனாவை முற்றாக அழிக்க உலகம் கண்டறிந்துள்ள ஒரே மாமருந்து மக்கள் ஓர் இடத்தில் கூடக் கூடாது. இதனைத் தவிர்த்து வேறு வழி இல்லை. இதனை உறுதிப்படுத்திடும் வகையில் நாளை (மார்ச் 22), ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊராடங்கு உத்தரவாக மக்கள் தங்களுக்குத் தாங்களே உத்தரவு பிறப்பித்துக்கொண்டு வீட்டில் இருந்திடல் வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது, மெட்ரோ ரயில் இயங்காது என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று வணிக சங்கங்கள் அறிவித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு எதிரான முழு அடைப்பு நடைபெற உள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் அல்ல, நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், சிறு, குறு தொழில்கள் மட்டுமல்ல, பெரும் தொழில்கள், கைத்தறி, விசைத்தறி, வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே பொருளாதார மந்த நிலை, தொழில்கள் மூடல், வேலையின்மை அதிகரிப்பு, வாங்கும் சக்தி குறைவு என்ற நிலையில் கரோனா தாக்கம் காரணமாக இவை மேலும் அதிகரித்து மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என அனைவரும் அறிந்த ஒன்றை மத்திய, மாநில அரசுகள் உணராமல் இருக்க இயலாது.
பாதிப்பில் இருந்து தொழில்களைப் பாதுகாக்க, தொழிலாளர்களைப் பாதுகாக்க தினக்கூலிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஆக்கபூர்வமான அறிவிப்புகள், நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது.
விவசாயம், விவசாயம் சார்ந்த கோழி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள், சிறு, குறு தொழில்கள், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை தொழில் வணிகம் என அனைத்தும் வங்கிகள் மூலம் கடன் பெற்றும், இத்தகைய கடன் வசதிகளைப் பெற இயலாதவர்கள் தனியாரிடத்தில் கடன் பெற்றும் தொழில்கள் நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் முடங்கிப் போய் விட்ட நிலையில், தொழில்களைக் காப்பாற்ற கடன் மற்றும் வட்டிகளைத் தள்ளுபடி செய்திட அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற உதவித் தொகை உடனடியாக வழங்கிட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு தொழில் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.