

கரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் பங்கெடுத்துக்கொள்ளும் விதமாக ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி நிறுவனங்களும் தங்கள் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்களும் தங்கள் ஒத்துழைப்பை அளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்தியாவின் முன்னணி கால் டாக்ஸி நிறுவனங்களும் கரோனா வைரஸ் தடுப்பு முயற்சியில் கரம் கோத்துள்ளன.
இதுகுறித்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான எங்கள் முயற்சிகளில் கால் டாக்ஸி சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அடுத்த அறிவிப்பு வரும்வரை இது தொடரும்.
ஓலா ஷேர் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவது குடிமக்களுக்கு அத்தியாவசியப் பயணத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் சமூக இடைவெளியை ஊக்குவிக்கும் முயற்சியாகும். அடுத்த அறிவிப்பிற்கு பிறகு மைக்ரோ, மினி மற்றும் பிரைம் மற்றும் வாடகை மற்றும் வெளி நிலைய சேவைகளை தொடர்ந்து வழங்குவோம்'' என்று தெரிவித்துள்ளது.
ஊபர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் சேவை செய்யும் நகரங்களில் கரோனா வைரஸ் பரவுவதைக் குறைக்க உதவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு, இந்தியா முழுவதும் ஊபர் சேவையை நிறுத்தி வைக்கிறோம்.
அரசாங்கம் தந்துள்ள ஆலோசனைக்கு இணங்க மக்கள் பாதுகாக்க இருக்க வேண்டும். அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.