மார்ச் 31-ம் தேதி வரை கேரளா, கர்நாடகம், ஆந்திர எல்லைகளை இணைக்கும் தமிழக எல்லைகள் மூடல்: தமிழக அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேச எல்லைகளை இணைக்கும் தமிழக எல்லைகள் மூடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள வாகனப் போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக 21.03.2020 முதல் 31.3.2020 வரை மூடப்படுகிறது.

இந்தச் சாலைகளில், கீழ்க்கண்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்:

1. அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள்.

2. இதர சரக்கு வாகனங்கள்.

3. தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காகப் பயணிக்கும் பயணிகளின் இலகு ரக வாகனங்கள்.

4. பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்.

எனினும், இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய்த் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

வாகனங்களும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in