

தமிழகத்தில் மேலும் 2 கரோனா பரிசோதனை மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதிக்க ஏற்கெனவே 5 பரிசோதனை மையங்கள் உள்ள நிலையில், மேலும் 2 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவை, அரசு பரிசோதனை மையங்களில் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.
சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, சேலத்தில் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும், 2 இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கரோனா பரிசோதனை மையங்கள் 7 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (மார்ச் 20) தன் ட்விட்டர் பக்கத்தில், ''தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கரோனா வைரஸ் குறித்து பரிசோதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.