

கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு தனி இணையதளத்தையே உருவாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனாவால், தமிழகத்திலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தமிழக அரசு கரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் தமிழக மக்கள், கரோனா வைரஸ் குறித்த தகவல்கள், சந்தேகங்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம். கரோனா அறிகுறி இருந்தால் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்? ஆரோக்கிய வாழ்வுக்கான அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன.
மேலும், கரோனா குறித்து விளக்கம் பெற, புகார் அளிக்க, தகவல் கொடுக்க 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பக்கமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான இணைய முகவரி - http://stopcoronatn.in