

மக்களிடையே சுய தனிமைப்படுத்தல் அவசியம் என்று கோலி, அனுஷ்கா இருவரும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே கரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ''மார்ச் 22-ம் தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்'' என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் விளையாட்டு வீரரான விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் மக்கள் ஊரடங்கை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் இருவரும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள வீடியோவில், ''நாம் இப்போது மிகவும் கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். நமக்காக, நம்முடைய பாதுகாப்புக்காக மட்டுமே நாம் வீட்டில் இருக்கிறோம்.
கரோனா தொற்று மேலும் அதிகரிப்பதைத் தடுக்க, இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும். உங்களுக்காகவும் மற்ற அனைவருக்காகவும் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்வோம். வீட்டில் இருப்போம், நலமுடன் இருப்போம்'' என்று தெரிவித்துள்ளனர்.