கரோனா வைரஸ் குறித்து வதந்தி: ஹீலர் பாஸ்கர் கைது

கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர். படம்: ஜெ.மனோகரன்
கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர். படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு உறுதியாகியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பெரிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடயே, கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்க்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ், கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர போலீஸாரிடம் புகார் அளித்து இருந்தார்.

அதன்பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர். அதில், கோவைப்புதூரில் இயற்கை மருத்துவ மையம் வைத்துள்ள செல்வபுரத்தைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கர் என்பவர் கரோனா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியுள்ளார் எனத் தெரிந்தது.

இதையடுத்து, குனியமுத்தூர் போலீஸார் மக்களிடம் பீதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்து ஹீலர் பாஸ்கரை இன்று (மார்ச் 20) கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரைச் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in