கரோனா வைரஸ்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்குத் தடை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற சைவத் திருத்தலம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகும். இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இதையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று முன்தினம் மேற்கு கோபுர வாயில், தெற்கு கோபுர வாயில், வடக்கு கோபுர வாயில் ஆகிய மூன்று வாயில்களும் அடைக்கப்பட்டு கிழக்கு கோபுர வாயில் வழியாக மட்டும் பக்தர்கள், மருத்துவர்கள் குழு சோதனைக்குப் பின்னரே கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 20) காலை கிழக்கு கோபுர வாயில் அருகே ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் , நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா, கோயில் பொது தீட்சிதர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இன்று முதல் நடராஜர் கோயிலில் நான்கு கோபுர வாயில்களையும் அடைத்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள் செல்லத் தடை விதிப்பது, வழக்கம்போல் நடைபெறும் பூஜை புனஸ்காரங்களை தீட்சிதர்கள் நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் நான்கு கோபுர வாயில்களிலும் கரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in