

கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக வீடுகளில் இருந்து வேலை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ஒரே வாரத்தில் 1.2 கோடி பயனர்கள் அதிகரித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.
குழு கலந்துரையாடல் மற்றும் காணொலி கருத்தரங்குக்கென 'டீம்ஸ்' என்னும் மைக்ரோசாஃப்ட் செயலி செயல்பட்டு வருகிறது. இதை சுமார் 2 கோடி பயனர்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருவதாக கடந்த நவம்பர் மாதம் மைக்ரோசாஃப்ட் தெரிவித்திருந்தது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதத்தில் 'டீம்ஸ்' செயலியைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 3.2 கோடியாக உயர்ந்தது.
இதற்கிடையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அலுவலக ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மத்திய அரசும் வீடுகளில் இருந்து வேலை செய்வதை ஊக்குவித்தது.
இந்நிலையில் ஒரே வாரத்தில் 'டீம்ஸ்' செயலியைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 1.2 கோடி அதிகரித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3.2 கோடியாக இருந்த பயனர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா கூறும்போது, ''வேலை செய்யும் விதம் உலகம் முழுவதும் மாறியுள்ளது. நிறுவனங்களும் இதை ஊக்கப்படுத்தி வருகின்றன. இதனால் நாங்களும் நிறையக் கற்று வருகிறோம்'' என்றார்.
வணிகக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 'டீம்ஸ்' செயலிக்கு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. நுகர்வோர்கள் இதை இலவசமாகவே பயன்படுத்தலாம்.
'டீம்ஸ்' காணொலிக் கருத்தரங்குகள் மூலம் பென்சில்வேனியாவில் மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.