

கரோனா பரவலைப் பரிசோதிக்காவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இதுவரை 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனாவுக்கு வெளியே பலியானவர்கள் ஆவர்.
இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, ''காட்டுத் தீ போல வைரஸ் பரவலை நாம் அனுமதித்துவிடக் கூடாது. குறிப்பாக உலகம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தொற்று பரவல் நடந்துவிட்டால், அதுவே லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுவிடும்.
இந்த விவகாரத்தில் உலகளாவிய ஒற்றுமை, தார்மீக ரீதியில் கட்டாயம் மட்டுமல்ல, அனைவரின் நலன் சார்ந்தது. இந்தச் சூழலில் இருந்து நாம் அனைவரும் உடனடியாக விடுபட வேண்டும். அதற்கு வெளிப்படையாக சுகாதாரக் கொள்கைகளைக் கட்டமைக்க வேண்டும். சூழலைக் கையாளக் குறைவாகவே தயாரான நாடுகளுக்கு, சக நாடுகள் உதவ வேண்டும்.
செல்வந்த நாடுகள் தங்களின் சொந்தக் குடிமக்களை மட்டும் கவனித்தால் போதும் என்று நினைத்துவிடக் கூடாது. ஜி20 நாடுகள் அனைத்தும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
இது நடக்கவில்லையென்றால் பேரழிவுகள் கூட ஏற்படலாம். இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.