

வழக்கமான பாரம்பரிய போர்த் தளவாடங்கள் கொண்டு கரோனா வைரஸுக்கு எதிராகப் போரிடுவதெல்லாம் சாத்தியப்படாது. இழப்பதற்கு நமக்கு நேரமில்ல. வேகமாகச் செயல்படுங்கள். அனைத்தையும் மூடுவதுதான் சிறந்த வழி என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
உலக நாடுகளை கதிகலங்க வைத்துவரும் கரோனா வைரஸுக்கு உலக அளவில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொத்துக் கொத்தாக காவு வாங்கிய கரோனா வைரஸ் தற்போது தனது கோரமுகத்தை இத்தாலி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பக்கம் திருப்பியுள்ளது.
இந்தியாவில் மெல்லப் பரவி வரும் கரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் கரோனா வைரஸால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். சில வாரத்துக்கு முன் ஒற்றைப் படை எண்ணிக்கையில் பாதிப்பில் இருந்த நிலையில் தற்போது 3 இலக்க எண்ணிற்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாகக் குழந்தைகள், 60 வயதுக்கு மேலான முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மக்களிடம் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் வேகம் போதாது என்றும், அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "பிரதமர் மோடி மக்களிடம் நேரடியாக உரையாற்றிப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசியதை ஆதரிக்கிறேன். ஆனால், நேரத்தை வீணாக்காமல் சமூக, பொருளாதார நடவடிக்கைகளைத் துணிச்சலாக, மிக வேகமாகக் கண்டிப்பாக எடுப்பது அவசியமானதாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கூற்றுப்படி இந்தியாவில் இன்னும் கரோனா வைரஸ் 2-ம் படிநிலையில்தான் இருக்கிறது. இதுதான் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டிய காலகட்டம். தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல் இந்த தருணத்தை நாம் கடக்க அனுமதித்தால் இதற்காக நாம் பின்னாளில் வருத்தப்பட வேண்டியது இருக்கும்.
பிரதமர் மோடி நேற்று பேசிய பேச்சை ஆதரிக்கிறேன். ஆனால், உறுதியாகக் கூறுகிறேன். பிரதமர் மோடிக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை, கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு நான் சற்று வியந்தேன். பிரதமர் மோடி தான் செயல்படுவதற்கு முன் மக்களின் உணர்வுகள், எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று சோதித்துப் பார்க்கிறாரா என்று நினைத்தேன். கரோனா வைரஸுக்கு எதிரான போர் என்றால் வழக்கமான பாரம்பரிய ஆயுதங்கள் மூலம் நடத்த முடியாது. நகரங்களை, பெருநகரங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதன் மூலமே சாத்தியம்" எனத் தெரிவித்துள்ளார்.