

தற்போது எந்த நாட்டில், எந்த இடத்தில் தங்கி இருக்கிறீர்களோ அந்த இடத்திலேயே பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்திய அரசு மூலம் உதவி செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் உலக அளவிலும், இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலக அளவில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மெல்லப் பரவிய கரோனா வைரஸால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப அதிகமாக ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், பல நாடுகள் கரோனா வைரஸ் அச்சம் காரணமாகச் சர்வதேச விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தாமு ரவி பேட்டி அளித்துள்ளார். கரோனா வைரஸ் தொடர்பாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பொறுப்பு அதிகாரியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தாமு ரவி நிருபர்களிடம் பேசுகையில், "இப்போதுள்ள சூழலில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க முடியாத நிலையில் இருக்கிறோம். அவர்கள் எந்த நாட்டில், எந்த இடத்தில் தங்கி இருந்தாலும் அங்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கரோனா வைரஸ் சூழலைப் புரிந்துகொண்டு அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தற்காலிகமானவைதான். யாரும் பதற்றப்பட வேண்டாம். இடைப்பட்ட நாடுகளில் இந்தியர்கள் சிக்கியிருந்தாலும் அங்கேயே இருக்கட்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை இந்திய அரசு வழங்கும். எங்களின் ஆலோசனை அங்கேயே தங்கி இருங்கள்.
இந்திய அதிகாரிகள், தூதர்கள் தவிக்கும் இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவார்கள். அவர்களின் கவலைகளை அறிந்து உதவுவார்கள். முடிந்தவரை உங்களுக்கு உதவிகள் வந்து சேரும்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும் நோக்கில் புறப்பட்டு வேறு ஏதாவது நாட்டில் சிக்கி இருக்கக்கூடும். அவ்வாறு சிக்கியுள்ள இந்தியர்களுக்கு எந்த நாட்டில் சிக்கி இருக்கிறார்களோ அந்த நாட்டின் தூதரகம் மூலம் தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு பேசி வருகிறது.
இந்தியர்களுக்குத் தேவையான உதவி எண்களையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கட்டணமில்லா கட்டுப்பாட்டு அறை எண் 1800118797, +91-11-23012113, +91-11-23014104 and +91-11-23017905 (ஃபேக்ஸ் எண்-+91-11-23018158) ஆகியவையும், covid19@mea.gov.in. என்ற மின்னஞ்சலும் வழங்கப்பட்டுள்ளன.