

கரோனா வைரஸ் எனும் மாபெரும் மனிதப் பேரழிவை தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை எல்லாம் பதற வைக்கிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல் கிறது. உலகம் முழுவதும் வைரஸால் இதுவரை 2.19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,000 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. எனினும், இதுவரை கரோனா வைரஸை ஒழிக்க சரியான மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய் வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாக பரவும் என்ற அச்சம் நிலவு கிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 20) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசின் அனைத்து எச்சரிக்கைகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் கடந்து மதுக்கடைகளில் கூட்டம் வழிகிறது. மதுக்கடைகள் கரோனா வைரஸை பரப்பும் மையங்களாக மாறி விடக்கூடாது. ஆகவே, மாபெரும் மனிதப் பேரழிவைத் தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்!
கரோனா பரவலைத் தடுக்க பிரதமர் அறிவித்துள்ள ஒரு நாள் மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்க நடவடிக்கை. அவரது அறிவிப்பை மதித்து தனித்திருப்போம், விழித்திருப்போம். இதையே அடுத்த 3 வாரங்களுக்கு வாடிக்கையாக மாற்றிக்கொள்ள முயலுவோம்!
மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் வணிக அமைப்புகள், தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள் தாராளமாக நன்கொடை வழங்கி உதவ வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
ராமதாஸ் தன் ட்விட்டர் பதிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை 'டேக்' செய்துள்ளார்.