

கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் டெல்லியில் அனைத்து ரெஸ்டாரன்ட்களையும் வரும் 31-ம் தேதி வரை மூட வேண்டும். ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட யாருக்கும் அனுமதியில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திரையரங்குகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் வரும் 31-ம் தேதி வரை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியில் இதுவரை 10 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''டெல்லியில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் உள்ள அனைத்து அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை தங்கள் பணிகளைப் பிரித்து, அத்தியாவசியமில்லாத பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசியமில்லாத பணிகள் அனைத்தும் நாளை (20-ம் தேதி) முதல் நிறுத்தப்படுகிறது
டெல்லியில் 20 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. சமூக, கலாச்சார, அரசியல் கட்சி கூட்டங்கள் அனைத்துக்கும் 20 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கையாகும்.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் நாம் இருக்கிறோம். இன்னும் சமூகத்துக்குப் பரவுவதைத் தடுக்கும் முறைக்குச் செல்லவில்லை.
கரோனா வைரஸ் அறிகுறி வந்தவர்கள் சுய தனிமைக்கு உள்ளானவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அங்கிருந்து வரக்கூடாது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. அவ்வாறு விதிமுறைகளை மீறினால் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்படுவார்கள்.
வரும் 31-ம் தேதி வரை டெல்லியில் அனைத்து ரெஸ்டாரன்ட்களும் மூடப்படுகின்றன. ரெஸ்டாரன்ட்கள், ஹோட்டல்களில் யாரும் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதியில்லை. அதேசமயம், வீட்டுக்கு உணவுகளை பார்சல் எடுக்கவோ, அல்லது வீட்டுக்கு டெலிவரி செய்யவோ தடையில்லை.
நாள்தோறும் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், பேருந்து நிலையங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. தனியார் வாகனங்களும் சுத்தம் செய்யப்படுகின்றன''.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.