Last Updated : 19 Mar, 2020 07:12 PM

 

Published : 19 Mar 2020 07:12 PM
Last Updated : 19 Mar 2020 07:12 PM

கரோனா பீதி: மார்ச் 29-ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்குள் வரத் தடை: குழந்தைகளை வெளியே விடாதீர் -மத்திய அரசு திடீர் உத்தரவு

மத்தியசுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்துள்ளதையடுத்து அதைத் தடுக்கும் வைகையில் அதிரடியாகக் களமிறங்கியுள்ள மத்திய அரசு வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனைத்து சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்குள் வரத் தடை விதித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் என்ற ஒற்றை வார்த்தைக்கு இந்தியாவும் தப்பவில்லை. உலக அளவில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைக் காவு வாங்கியுள்ளது.

இந்தியாவில் மெல்ல ஊடுருவிய கரோனா வைரஸுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் கடந்த 24 மணிநேரத்துக்குள் 20 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் லாவ் அகர்வால் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

  1. வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இந்தியாவுக்குள் அனைத்துவிதமான சர்வதேச விமானங்கள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை தற்காலிகமானதுதான்.
  2. ரயில்வே, விமானம் போன்றவற்றில் மக்களின் நெருக்கத்தைக் குறைக்கும் வகையில் இந்த இரு போக்குவரத்திலும் மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தவிர மற்ற பிரிவினருக்குச் சலுகைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
  3. வீடுகளில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களைப் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளிவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  4. அவசர சேவை, அத்தியாவசிய சேவை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களைத் தவிர மற்ற துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீடுகளிலேயே பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  5. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் முறையான மருத்துவ சிகிச்சை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு முறையான அறிவுரைகளை மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். முதியோர்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.
  6. மத்திய அரசில் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் அனைவரும் உயரதிகாரி உத்தரவுப்படி மாற்று தினங்களில் பணிக்கு வந்தால் போதுமானது.

இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x