Published : 19 Mar 2020 05:19 PM
Last Updated : 19 Mar 2020 05:19 PM

மதுரையில் கரோனா வைரஸ் தடுப்பு முகாம்களுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் கைது; சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுமாற்றம்

மதுரை

துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பவுள்ள 200-க்கும் மேற்பட்டோரைத் தனிமைப்படுத்தும் வகையில் கரோனா வைரஸ் தடுப்பு முகாம்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வந்த இளைஞருக்கும், இன்று அயர்லாந்தில் இருந்து வந்த நபருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோரும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள்தான்.

இந்நிலையில், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பியுள்ள 200-க்கும் மேற்பட்டோரைத் தனிமைப்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று இடங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 200 பேரை 15 நாட்கள் தனிமைப்படுத்தி, கண்காணிப்பில் வைக்கவும் அவர்களுக்கு கரோனா அறிகுறி இருப்பது உறுதியானால் அவர்களை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மதுரை விமான நிலையம் அருகே மூன்று இடங்களைத் தேர்வு செய்து, விமான நிலையங்களில் இருந்து வருகிறவர்களை இந்த முகாம்களில் தங்க வைத்துப் பரிசோதனை செய்து கண்காணிக்க மதுரை மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.

ஆனால், இந்த முகாம்கள் அமைக்கும் இடங்கள் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் இந்த முகாம்களை அமைக்கக்கூடாது என்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் மூலம் தங்கள் பகுதிகளுக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளது என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரை அழைத்துச் செல்லுங்கள் என்று மறியலில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சின்ன உடைப்பு , பாப்பனோடை. போக்குவரத்து நகர் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

மக்களின் போராட்டத்தால், இந்த முகாம்களை உடனடியாக அமைக்க முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையிலும் சமாதானம் அடையாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அங்கு அசாதாரண சூழலே நிலவுகிறது.

இதற்கிடையில், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணகி, மதுரை தெற்கு தாசில்தார் அனிஸ் அக்தார் மற்றும் காவல்துறை துணை ஆணையர் கார்த்திக், திருப்பரங்குன்றம் உதவி ஆணையாளர் ராமலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தையில் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தற்போது போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 40 பேரைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கல்வி, வியாபாரம் நிமித்தமாக வெளிநாடு சென்ற தமிழர்கள் தண்ணீர், உணவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள். தமிழகம் திரும்புகிற அவர்களை வர வேண்டாம் என்று சொல்ல முடியாது. அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும் வரை விமான நிலையங்களையும் மூட முடியாது.

அதேவேளையில் தாயகம் திரும்பும் அவர்களை முறையான பரிசோதனைக்கு உட்படுத்தாமல் வீடுகளுக்கும் அனுப்ப முடியாது. அவ்வாறு செய்தால், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவக்கூடும். அதனால், அவர்களை ஓரிரு நாள் முதல் 15 நாட்கள் வரை தங்க வைத்துப் பரிசோதனை சிகிச்சைகளைச் செய்வதற்கு ‘கரோனா’ வைரஸ் தடுப்பு மையங்களை அமைக்கிறோம். ஆனால், பொதுமக்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x