

கரோனா அச்சுறுத்தலை அடுத்து, ஒரு நபரைச் சந்திக்கும்போது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு உரையாடுங்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், டெல்லி, மும்பை, கர்நாடகாவைச் சேர்ந்த தலா ஒருவர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டமான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ''கரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் வேளையில் பயணம், சந்திப்பு மற்றும் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைக் கூடுமானவரை தவிர்த்து வீட்டிலேயே தங்குமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நபரைச் சந்திக்கும்போது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு உரையாடுங்கள்.
போராட்டங்கள், திருமண நிகழ்வுகள் போன்ற ஒன்றுகூடல்களைச் சற்று ஒத்திவைக்கலாம். ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், அக்கறையோடும் இருப்போம்'' என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.