

கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாகை மாவட்டத்தில் வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் மேலசெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (35). இவர் லண்டனில் இருந்து விமானம் மூலமாக கடந்த 10 நாட்களுக்கு முன் பெங்களூரு வந்தார். அங்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என மருத்துவக் குழுவினர் ஆனந்தை பரிசோதனை செய்தனர். வைரஸ் தொற்று இல்லாததால், அவரை 14 நாட்கள் வரை வெளியில் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பினர்.
பின்னர், குத்தாலம் வந்த ஆனந்த் நேற்று (மார்ச் 18) மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்து, பெங்களூருவில் தனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறினார். தேவைப்பட்டால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும்படி மருத்துவர் அறிவுறுத்தி, ஆனந்தை அனுப்பினார்.
இந்நிலையில், லண்டனில் இருந்து வந்த ஒரு இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வாட்ஸ் அப்பில் செய்தி வைரலானது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த், இது குறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி, சமூக வலைதளங்களில் தவறான தகவலைப் பரப்பியதாக, மயிலாடுதுறையைச் சேர்ந்த கில்லி பிரகாஷ் (36) என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.