Published : 19 Mar 2020 01:25 PM
Last Updated : 19 Mar 2020 01:25 PM

செய்த தவறையே மீண்டும் மீண்டும்  செய்கின்றனர்:  ஐரோப்பிய, அமெரிக்க மருத்துவர்கள் குறித்து சீன நிபுணர்கள் கவலையுடன் எச்சரிக்கை

சீனாவில் வூஹானில் கரோனா தொற்று ஏற்பட்டு பரவியபோது சீன மருத்துவர்கள் செய்த அதே தவறுகளை ஐரோப்பிய மருத்துவர்களும் செய்வதால்தான் ஐரோப்பா கரோனாவின் புதிய மையமாக உருவெடுத்துள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையுடன் கவலை தெரிவித்துள்ளனர்.

இதில் மிக முக்கியமான தவறாக அவர்கள் சுட்டிக்காட்டுவது என்னவெனில், மருத்துவ ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசம் அளிக்காமல் விட்டதால் அது மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோருக்கு பெரிய அளவில் தொற்றி மேலும் பரவ வித்திட்டது என்கின்றனர்.

சீனாவின் வூஹானில் முதலில் கரோனா பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதும், போதுமான தடுப்பு சாதனங்கள் கையிருப்பு இல்லாததும் வெகு விரைவில் பரவக் காரணமாகின.

இது குறித்து பீகிங் யூனியன் மெடிக்கல் காலேஜின் கேஸ்ட்ரோ-எண்டராலஜி பேராசிரியர் டாங் வூ கூறும்போது, “நம் ஐரோப்பிய சக மருத்துவர்கள் தங்களது தினரசி மருத்துவ நடைமுறைகளில் கரோனாவினால் தாங்கள் பாதிக்கப்படுவதோடு பிறருக்கும் அதனைத் தொற்றச் செய்கின்றனர்” என்றார். முதலில் மருத்துவ ஊழியர்களை பாதுகாக்க வேண்டும், இதுதான் முதற்படி என்கின்றனர் சீன மருத்துவர்கள்.

அமெரிக்கா முதல் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தற்காப்புக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணக்கள் தட்டுப்பாடாகியுள்ளன, நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க மருத்துவர்கள், நர்ஸ்கள் எண்ணிக்கைக் குறைவாக உள்ளன. மிகவும் அபாயகரமான வைரஸான கோவிட்-19 வழக்கத்துக்கு மாறான வழிகளில் பலரையும் பீடித்து வருகிறது, உதாரணமாக கண்கள் மூலமே பரவுகிறது.

வூஹானில் கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களுக்கு மற்றப் பிரிவினரை விட கரோனா தொற்று வேகமாகப் பரவியது என்கிறார் இதே பீகிங் யூனியன் மெடிக்கல் காலேஜைச் சேர்ந்த இன்னொரு பேராசிரியர் டூ பின்.

”என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் கரோனா தொற்று நோயாளிகளிடம் மருத்துவர்கள் நெருக்கமாக இருந்ததால் இவர்களையும் வெகுவிரைவில் தொற்றியது. எனவே சிகிச்சை அளிக்க வேண்டும், ஆனால் மருத்துவர்களை தொற்றக் கூடாது அந்த வகையில் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது கட்டாயம்” என்றார்.

ஆனால் சீனா அதன் பிறகு விழித்துக் கொண்டது கட்டுப்பாடுகள், சிவில் உரிமைகள் குறித்த கடும் விமர்சனங்களுக்கு இடையே இன்று உள்நாட்டிலிருந்து கரோனா தொற்று புதிதாக பீடிக்காத நிலையை 3 மாதங்களில் சீனா எட்டியது. ஆரம்பத்தில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டது.

இந்நிலையில் சீன மருத்துவர்கள் கரோனாவை எதிர்த்துப் போராட புதிய சில வழிமுறைகளை எடுத்துரைத்தனர்:

சோதனைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்:

முந்தைய சார்ஸ் வைரஸ் பரவலின் போது 2003-ல் இருந்தது போல் கரோனா அல்ல, இது சாதாரண அறிகுறிகளிலிருந்து அறிகுறிகளே இல்லாத தொற்றாகக் கூட இருந்துள்ளது ,இருக்கிறது. இதன் அர்த்தம் என்னவெனில் இவர்கள் கரோனா தொற்றை தாங்கள் அறியாமலேயே பிறருக்குப் பரப்பி விடுகின்றனர். நியூக்ளீய்க் ஆசிட் பரிசோதனைகள் கட்டாயம், இந்தச் சோதனைதான் வைரஸின் மரபணுத் தொடரை நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அடையாளம் காட்டும், என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆகவே டெஸ்ட்... டெஸ்ட்.. டெஸ்ட், இதைத்தவிர வேறு வழி தனக்குத் தோன்றவில்லை என்கிறார் டூ பின்

அமெரிக்க அரசு பரிசோதனைகளை மேற்கொள்வதில் மந்த நிலை காட்டுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் போதிய பரிசோதனைகளே நடத்தப்படுவதில்லை என்று நிபுணர்கள் விமசித்து வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக பரவிய ஆசியநாடான தென் கொரியாவில் தினசரி அடிப்படையில் ஆயிரக்கணக்கானோருக்கு உடல் பரிசோதனை செய்து கட்டுப்படுத்தி வருகின்றனர்.

குழந்தைகள் முதியவர்கள்:

கரோனா தொற்று 60 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் இலக்காக்கும் என்றாலும் கூட குழந்தைகளையும் சில வேளைகளில் கோவிட்-19 தொற்ற வாய்ப்புள்ளது இது மரணத்திலும் முடியலாம் என்று உலக சுகாதார அமைப்பு திங்களன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளை விட வயதானவர்களுக்கு கரோனா பாதிப்பு 2.5 மடங்கு அதிகம் என்று நேச்சர் மெடிசின் இதழ் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.

டிசிஎம்- பாரம்பரிய சீன மருந்து

கரோனாவை ஒழித்துக் கட்ட இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் சீனாவில் அதன் மரபான, பாரம்பரிய மருந்துகள் கைகொடுப்பதாக டிசிஎம் அதிகாரி லீ யூ என்பவர் தெரிவித்துள்ளார். மூலிகை அடிப்படையிலான சிகிச்சை 87% கரோனா தொற்றியவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது என்று சீன அரசு ஊடகமான சினுவா பிப்ரவரி 17ம் தேதி தெரிவித்தது.

ஆனால் மேற்கத்திய மருந்துக்கும் இதற்கு வேறுபாடு உள்ளது, மேற்கத்திய மருந்தைக் காட்டிலும் இதன் திறன் பற்றிய அளவீட்டு மதிப்பீடு உள்ளிட்டவைகளில் சீன பாரமப்ரிய மருந்து வேறுபட்ட தத்துவ அடிப்படைகளைக் கொண்டது என்கிறார் பேராசிரியர் டூ பின். எனவே மேற்கு நாடுகளில் இது ஒத்துப் போகுமா என்பது ஆய்வுக்குரியது என்கிறார்.

கரோனாவிலிருந்து மெல்ல சீனா தனது அதீதக் கட்டுப்பாடுகள் வலுக்கட்டாய சோதனை முறைகள் மூலம் சற்றே வெளியே வந்த நிலையில் தற்போது இத்தாலிக்கு மருத்துவ நிபுணர்களையும் 30 டன்கள் கொண்ட மருத்துவ சப்ளைகளையும் இறக்கியுள்ளது.

“நாங்கள் சீனா கடைபிடித்த முறைகளைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்று கூறவில்லை, ஒவ்வொரு தேசத்திலும் கோவிட்-19 சூழல் வேறுபட்டதாக இருக்கும், ஆனால் இதனை பொறுப்புடனும் சீரியசாகவும் அணுகுதல் அவசியம். அரசாங்கங்கள் தேவையான அவசர நடவடிக்கைகளை, அதாவது பலரையும் சோதனை செய்யும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்வது அவசியம், பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஒரு அவசரக் காலக்கட்டமாகும் இது” என்று சீன பேராசிரியர் டூ பின் எச்சரித்துள்ளார்.

-ப்ளூம்பர்க்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x