கரோனா அச்சம்: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க அனுமதி ரத்து; பரோலும் கிடையாது

புதுச்சேரி மத்திய சிறை: கோப்புப்படம்
புதுச்சேரி மத்திய சிறை: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி உள்பட 4 பிராந்தியங்களில் உள்ள சிறைகளில் கைதிகளை சந்தித்க உறவினர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பரோலும் ரத்தாகியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியில் மத்திய சிறைச்சாலையும், காரைக்கால் உட்பட இதர பிராந்தியங்களில் கிளை சிறைச்சாலைகளும் உள்ளன.

இங்கு கைதிகளைப் பார்க்க உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று வருவது உண்டு. தண்டனைக் கைதிகளுக்கு வாரத்தில் இரு நாட்களும், விசாரணைக் கைதிகளுக்கு வாரத்தில் இரு நாட்களும், வழக்கறிஞர்கள் அனைத்து நாட்களிலும் விண்ணப்பித்து கைதிகளை சந்திக்கலாம்.

தற்போது புதுச்சேரியில் கைதிகளை உறவினர்கள், வழக்கறிஞர்கள் சந்திக்க இன்று (மார்ச் 19) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவே பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன் பரோலும் ரத்தாகியுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளுக்கு வைரஸ் அறிகுறி உள்ளதா என்ற பரிசோதனையும் செய்யப்படுவதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, புதுச்சேரி மாஹே பகுதியில் வயதான பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மதுபான பார்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in