

கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் எச்சரித்துள்ளார்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று (மார்ச் 19) அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழ்நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களிடம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினோம். தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்த அறிவுறுத்தியிருக்கிறோம். தனியார் மருத்துவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.
தனியார் மருத்துவர்கள் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதது என்ன என்பதை அறிவுறுத்தியிருக்கிறோம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அவர்களுக்கு விளக்கியிருக்கிறோம். அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வார்டுகளை ஏற்படுத்த தனியார் மருத்துவமனைகள் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. அதற்கு தனியார் மருத்துவர்களுக்கு நன்றி.
3,500 மதிப்புள்ள தெர்மல் ஸ்கேனரின் விலையை அதிகப்படுத்தி 15 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக ரகசிய சோதனை நடத்தி சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். எண் 95 முகக்கவசங்களை அங்கிருந்து பறிமுதல் செய்திருக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். அரசு எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கிறது. எந்தவிதமான தொற்றும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்கிறது.
தினமும் அதிகாரப்பூர்வமாக மாலை 3 மணிக்கு விமான நிலையங்களில் எத்தனை பேரை சோதனை செய்கிறோம், எத்தனை பேரை ரயில் நிலையங்களில் சோதனை செய்கிறோம், வீட்டுக் கண்காணிப்பில் வைக்கிறோம் என தமிழ்நாடு முழுக்க தகவல்களை திரட்டி தருகிறோம்.
என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என அன்புடன் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறேன். அதையும் மீறி பரப்பினால் மிகக்கடுமையான நடவடிக்கை காவல் துறை மூலமாக எடுக்கப்படும். அதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
வெளி மாநிலங்களிலிருந்து மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து வந்து இறங்குகின்றனர். அது நிச்சயமாக எங்களுக்கு மிகப்பெரிய சவால் தான். அதனால் தான் சிறப்பு ரயில்களை ரத்து செய்யுமாறு ரயில் நிலையங்களை கோரிக்கை வைத்தோம். அவை ரத்து செய்யப்பட்டு விட்டன. 40-50 சதவீதத்தினர் அவர்களாகவே தங்கள் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்கின்றனர். அது நல்ல தகவல்"
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.