

சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கரோனா பரவி அமெரிக்க மருத்துவமனையில் 35 பேர் மரணமடைந்து இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரோனா காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே பணியாளர்கள் மூலம் கரோனா பரவி அமெரிக்க மருத்துவமனையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக நோய் சிகிச்சை மையங்களுக்குச் சென்று பார்வையிட்ட நோய் கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பு, இதைத் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனின் வடமேற்கு மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிர்க்லேண்ட் என்னும் பகுதியில், ஒரு கருணை இல்லம் உள்ளது. அங்கு சுமார் 130 பேர், மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டு அத்தியாவசிய சிகிச்சையில் உள்ளனர். உயர் ரத்த அழுத்தம், இதய மற்றும் சிறுநீரக நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களுக்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
அங்கு சிகிச்சை அளித்து வந்த பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அதன் மூலம் அங்கிருந்த நோயாளிகளுக்கும் கரோனா பாதிப்பு உண்டானதாகவும் கூறப்படுகிறது.
கிர்க்லேண்ட் இல்லத்தில் இருந்து மட்டும் குறைந்தது 35 மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் அறிகுறிகளை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தல் நிகழவில்லை எனவும் சந்திப்புகளுக்குத் தடை விதித்திருக்க வேண்டும் என்றும் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.