Last Updated : 18 Mar, 2020 08:51 PM

 

Published : 18 Mar 2020 08:51 PM
Last Updated : 18 Mar 2020 08:51 PM

ஈரானில் நடந்த அதிசயம்: கரோனா வைரஸிலிருந்து தப்பிப் பிழைத்த 103 வயது மூதாட்டி

பிரதிநிதித்துவப்படம்

டெஹ்ரான்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு முதியோர்கள் அதிகமானோர் பலியாகிறார்கள் என்ற தகவல் வரும் நிலையில், 103 வயது மூதாட்டி கரோனா வைரஸிலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளார்.

ஈரான் நாட்டில் நடந்த அதிசய நிகழ்வை அங்குள்ள ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக ஐஆர்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இதுவரை 195 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதுவரை 8 ஆயிரம் பேர் உலக அளவில் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் நாடுகளில்தான் அதிகமான மக்கள் பலியாகி வருகின்றனர். அந்த வகையில் ஈரானில் இன்று ஒரேநாளில் மட்டும் 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஈரானில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1,192 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் குறித்த மருத்துவ ஆய்வுகள் அறிக்கையில் முதியோர்கள், நோய்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருபவர்கள்தான் அதிகமான கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்கள் உயிர் பலிதான் பெரும்பாலும் நடக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால், ஈரானில் 103 வயது மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஹ்ரான் அருகே செம்னான் நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த 103 வயது மூதாட்டி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின் அவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தலில் அவருக்கு கரோனா வைரஸ் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அந்த மூதாட்டி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து செம்னான் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவர் நாவிட் தனாய் கூறுகையில், "103 வயது மூதாட்டி கரோனா வைரஸிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டார். ஈரானிலேயே அதிகமான வயதில் கரோனா வைரஸுக்கு தப்பிப் பிழைத்த பெண் இவர்தான். இதற்கு முன் தென்கிழக்கு ஈரானில் கெர்மான் நகரில் 91 வயது முதியவர் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x