

தங்களது உயிர் குறித்த கவலையின்றி பணியாற்றி வரும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (மார்ச் 18) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்று பரவி உலகை அச்சுறுத்தி வரும் சூழலில் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேச முடியவில்லை. சந்தித்த உடன் கை குலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி நடுங்கி, வீட்டை விட்டு வெளியே வராமல் தான் உண்டு, தன் வேலை உண்டு, தனது உயிர் தனக்கு முக்கியம் என மனிதர்கள் முகக் கவசத்துடன் முடங்கிக் கிடக்கிறார்கள்.
இந்த அபாயகரமான சூழலில் தங்களது உடல்நிலை குறித்தும், உயிர் குறித்தும் எவ்விதக் கவலையும் இன்றி கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என நம்பிக்கையூட்டி, தாங்கள் ஏற்றுக்கொண்ட மருத்துவப் பணிகளை இன்முகத்தோடு திறம்பட மேற்கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களை, அவர்களோடு இணைந்து பணியாற்றும் செவிலியர்கள், மருந்தாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மனமுவந்து போற்றிப் பாராட்டுகின்றது.
தமிழ்நாடு அரசும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இந்த சந்தர்ப்பத்திலாவது அவர்களது நீண்ட நாளைய கோரிக்கைகளை நிறைவேற்றி ஊக்கப்படுத்த வேண்டும். சட்ட ரீதியான உரிமைகளுக்காகப் போராடினார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பல்வேறு தொலைதூர இடங்களுக்கு மாறுதல் செய்து பழிவாங்கப்பட்டனர். இதனால் மருத்துவர்கள் கடும் நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.
அரசின் பழிவாங்கல் நடவடிக்கையால் அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் நிர்பந்த மரணத்திற்கு ஆளானார் என்பதை அனைவரும் அறிவர்.
பழிவாங்கல் நடவடிக்கைகளை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை மதித்து, மருத்துவர்கள் பணியைப் பாராட்டி அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என முத்தரசன் தெரிவித்துள்ளார்.