கரோனா அச்சம்: உதகை மார்க்கெட் நுழைவு வாயில்களுக்குப் பூட்டு; நகராட்சி ஆணையர்

உதகை நகராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.
உதகை நகராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Updated on
1 min read

கரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடையே பரவி வரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையில் உதகை நகராட்சி மார்க்கெட்டில் உள்ள சிலவற்றைத் தவிர பிற நுழைவு வாயில்கள் பூட்டப்படும் என நகராட்சி ஆணையர் சரஸ்வதி தெரிவித்தார்.

கரோனா வைரஸ் குறித்து நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முக்கியமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள உதகை நகராட்சி மார்க்கெட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமை வகித்துப் பேசும்போது, "கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மக்களின் அச்சத்தைப் போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், உதகை நகராட்சி மார்க்கெட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்க தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். கூட்டமாக மக்கள் வருவதைத் தடுக்க நகராட்சி மார்க்கெட்டில் உள்ள சிலவற்றைத் தவிர பிற நுழைவு வாயில்கள் பூட்டப்படும்.

திறந்திருக்கும் ஓரிரு நுழைவு வாயில்களில் மக்கள் கை கழுவ சோப்பு மற்றும் தண்ணீர் வைக்கப்படும். மக்கள் மார்க்கெட்டுக்குள் நுழையும் முன்பு, கைகளைக் கழுவ வேண்டும். இதை வியாபாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும். கடைகளில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்தி, கடைகளைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்" என்றார்.

கைகளைக் கழுவும் முறை குறித்து நகர் நல அலுவலர் முரளிசங்கர் விளக்கினார். அவர் பேசும்போது, "நம்மை நாம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பும்போது கை, கால்கள் மற்றும் முகத்தைக் கழுவிய பின்னர் வீட்டினுள் செல்ல வேண்டும்.

கிருமி நாசினி கிடைக்காத நிலையில், 30 விநாடிகளுக்கு சோப்பால் கை கழுவினால் போதுமானது. ஒரு நாளைக்கு 5 முறையாவது கைகளைக் கழுவ வேண்டும். வியாபாரிகள் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சலால் வருபவர்கள் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 320 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து, அந்த கரைச்சலில் கீழே படியும் படிமங்களைத் தவிர்த்து , தண்ணீரை மட்டுமே எடுத்து 9 லிட்டர் தண்ணீரில் கலந்து, அந்தக் கரைசலை சுற்றுப்புறங்களில் தெளிக்க வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in