

சென்னை ரங்கநாதன் தெருவில் சிறிய கடைகள் உட்பட அனைத்துக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை, தியாகராய நகரில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக வளாகங்கள், பெரிய கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளனவா என்பது குறித்து இன்று (மார்ச் 18) வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மற்றொன்று கை கழுவும் பழக்கம் மிக முக்கியமானது. தியாகராய நகர் உட்பட அனைத்து வணிக வீதிகளிலும் இதனை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரி சங்கங்களிடம் இதனை வலியுறுத்தியுள்ளோம். சிறு கடைகளை மூட வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. பெரிய கடைகளை நிச்சயமாக மூட வேண்டும். திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், மால்களை மூடியுள்ளனர்.
தலைமைச் செயலாளர் தலைமையில் 19 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.இந்நடவடிக்கைகளின் தாக்கத்தைப் பொறுத்துதான் வரும் 31-ம் தேதிக்குப் பிறகு என்ன நடைமுறைகள் என்பதைச் சொல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், "ரங்கநாதன் தெருவில் மக்கள் அடர்த்தி அதிகம். அதனால் அங்கு மட்டும் சிறிய கடைகள் உட்பட அனைத்துக் கடைகளையும் மூடுவதற்கு அறிவுறுத்தியுள்ளோம். இதன் தாக்கத்தைப் பொறுத்து படிப்படியாக சிறிய கடைகள் திறக்கப்படும். எல்லா வணிக வீதிகளிலும் பெரிய கடைகளை மூடிவிட்டோம். இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இருக்க ரங்கநாதன் தெரு தவிர மற்ற பகுதிகளில் சிறிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 269 மாநகராட்சி பூங்காக்கள் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு, தினமும் கிட்டத்தட்ட 10-15 லட்சம் மக்கள் வருகை தருகின்றனர். அவற்றையும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.