

உலகம் முழுவதும் பரவிவரும் கோவிட் 19 வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கி நூதன விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் சலூன் கடை உரிமையாளர் ஒருவர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தால் 7000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.5 லட்சத்துக்கும் மேலானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு 147 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை, போன்று பொதுமக்கள் அதிகமாக சென்று வரும் இடங்களில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முடி திருத்தம் நிலையம் நடத்திவரும் சங்கரலிங்கம் என்பவரும் அவர் கடையில் வேலை பார்க்கும் 6 பணியாளர்களும் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மாஸ்க் அணிந்தவாறே வேலை செய்கின்றனர்.
இது வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும், தங்களின் சலூன் நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாக்கும் வகையில் இலவசமாக மாஸ்க் வழங்கிவருகின்றனர்.
இதற்காகத் தனியாகக் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை. இவர்களைப் போல அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக தற்காத்துக் கொள்ள முடியும்.