Last Updated : 18 Mar, 2020 12:46 PM

 

Published : 18 Mar 2020 12:46 PM
Last Updated : 18 Mar 2020 12:46 PM

கரோனா வைரஸ் ஒவ்வொரு இடத்திலும் பொருளிலும் எத்தனை மணிநேரம் உயிருடன் இருக்கும்: ஆய்வில் புதிய தகவல்

பிரதிநிதித்துவப்படம் : படம் உதவி ட்விட்டர்

லாஸ் ஏஞ்செல்ஸ்

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தரைத்தளத்திலும், காற்றிலும் பல மணிநேரங்கள் முதல் நாட்கள் கணக்கு வரை உயிருடன் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 1.80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள சுயசுத்தம், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சுத்திகரிப்பான் கொண்டு கழுவுதல் போன்றவை அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் உயிர்வாழும் தன்மை குறித்து ஆய்வு நடத்தி" நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன்" இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதாக அறிகுறிகள் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைப் போலத்தான் அவர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலம்தான் கரோனா வைரஸ் அதிகமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது.
  • கரோனா வைரஸ், சார்ஸ்-சிஓவி-2 (SARS-CoV-2) ஆகியவை காற்றிலும் பரவக்கூடியது. சுத்தம் இல்லாத பகுதிகளிலும், தரைத்தளத்திலும் 3 மணிநேரம் முதல் பல நாட்கள் வரை வாழக்கூடியது.
  • செம்பு பாத்திரங்கள், பொருட்களில் கரோனா வைரஸ் 4 மணிநேரம் வரை உயிர் வாழும்.
  • அட்டைகள், கார்ட் போர்ட் போன்றவற்றில் 24 மணிநேரம் வரை கரோனா வைரஸ் உயிர் வாழும்.
  • பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களில் 2 நாட்கள் முதல் 3 நாட்கள் வரை கரோனா வைரஸ் உயிர் வாழும்.

இதில் சார்ஸ் சிஓவி-2 மற்றும் சார்ஸ் சிஓவி-1 ஆகிய இரு வைரஸ்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தன்மை கொண்டவை. இந்த வைரஸ்கள் அதிகமான உயிரிழப்பை உண்டாக்குபவை. இந்த இரு வைரஸ்களும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆனால், கோவிட்-19 வைரஸ் அதாவது கரோனா வைரஸ் குடும்பத்தில் இருக்கும் இந்த வைரஸ் மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்க முடியவில்லை.

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் நாள்தோறும் ஒவ்வொரு இடத்தைத் தொடும்போதும், இருமல் செய்யும்போதும், பொருட்களைத் தொடும்போதும் மற்றவர்களுக்குப் பரப்புகிறார். இவ்வாறு பரவும் கரோனா வைரஸ் எத்தனை நாட்கள் வரை உயிர் வாழும் என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x