கரோனா தடுப்பு மருந்து: சீனாவிலும் பரிசோதனை தொடங்கியது

கரோனா தடுப்பு மருந்து: சீனாவிலும் பரிசோதனை தொடங்கியது
Updated on
1 min read

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை சீனாவிலும் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.70 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தோன்றியதாகக் கூறப்பட்ட கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைப் பரிசோதிக்கும் முயற்சி அண்மையில் அமெரிக்காவில் தொடங்கியது.

இதை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இவர்களுடன் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த மாடர்னா என்னும் பயோடெக்னாலஜி நிறுவனப் பணியாளர்களும் இணைந்து தடுப்பூசியை உருவாக்கினர். இதற்காக முதலில் 18 முதல் 55 வயதில் இருக்கும் ஆரோக்கியமான தன்னார்வலர்கள் 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை முயற்சியாக தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவைப் போல சீனாவும் தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சீனாவின் ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் மனிதர்களுக்குத் தடுப்பு மருந்தைச் செலுத்தி தடுப்பூசியைக் கண்டறிய ஒப்புதல் பெற்றுள்ளனர்.

இதற்காக ஆரோக்கியமான மனிதர்கள் 108 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களைக் கொண்டு முதல்கட்டத் தேர்வு நடைபெற உள்ளது.

மார்ச் 16-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த ஆய்வு நடைபெறும் எனவும் அதில் தன்னார்வலர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

சீனாவின் ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்த உள்ளது.

கரோனா வைரஸுக்குத் தனியாக இதுவரை எந்தவொரு மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் அடுத்த ஆண்டின் இறுதி வரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சந்தைக்கு வராது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in