

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 147 பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் கரோனா தொற்று தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்னதாக தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை தேசிய காலரா மற்றும் தொற்று நோய் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது. அவரிடமிருந்து எடுக்கப்பட்ட நான் சளி மாதிரிகளில் ஒன்றில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, அந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா விமான நிலையத்துக்கு லண்டனில் இருந்து வந்தார். அப்போது அவருக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் அவர் வீடு திரும்பினார்.
ஆனால், லண்டனில் அவருடன் கேளிக்கை நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர், மருத்துவமனைக்கு தாமாகவே சென்றார்.
அந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் அந்த இளைஞரை விமான நிலையத்தில் இருந்து அவரை அழைத்துவந்த கார் ஓட்டுநர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸைப் பொறுத்தவரை இந்தியா தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்த நிலயில், பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ கரோனா தொற்று ஏற்படுவது. இதில் குறைவான நபர்களே பாதிக்கப்படுவர்.
யாரிடம் இருந்து தொற்று ஏற்பட்டிருப்பது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இதனால் வைரஸ் சங்கிலியை உடைக்க முடியும்.