

லேஹ், லடாக்கில் பணியில் நியமிக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவத்தில் முதல் கரோனா தொற்று பரவியுள்ளது.
ஸ்னோ வாரியர்ஸ் என்ற இன்ஃபாண்ட்ரி ராணுவப் பிரிவைச் சேர்ந்த, லடாக் பிரிவில் பணியாற்றும் இந்த ராணுவ வீரர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த ராணுவ வீரரின் தந்தை ஈரானிலிருந்து பிப்.27ம் தேதி இந்தியா திரும்பியதாகத் தெரிகிறது, அப்போது இவர் விடுப்பில் வீட்டில் இருந்தார், பிறகு மார்ச் 2ம் தேதிதான் பணியில் சேர்ந்துள்ளார்.
இவரது தந்தை லடாக் இருதய மருத்துவமனையில் பிப்ரவரி 29ம் தேதி முதல் தனிமைப்பிரிவில் இருந்த போது மார்ச் 6ம் தேதி கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு ஒருநாள் சென்று மகனான ராணுவ வீரர் தனிமைப்படுத்தப்பட்டார். திங்களன்று இவருக்கு கரோனா தொற்று பரவியிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ராணுவ வீரரின் மனைவி, இரண்டு குழந்தைகள், சகோதரி ஆகியோரும் தனிமைப்பிரிவில் கோவிட்-19 பரிசோதனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.