Published : 18 Mar 2020 10:08 AM
Last Updated : 18 Mar 2020 10:08 AM

மாஸ்க் அணிவது எப்படி, யாரெல்லாம் அணியவேண்டும்?- அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, யாரெல்லாம், எப்படி மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை 147 பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாஸ்க் அணிவதன் மூலம் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம் என்று கூறப்படுவதால், மாஸ்க் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து யாரெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியதில்லை. 3 வகையான மக்கள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதுமானது.
1. சளி, காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்ட மக்கள்
2.கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கரோனா அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கவனித்துக் கொள்வோர்
3. மூச்சு விடுவதில் சிரமம் கொண்ட நோயாளிகளைப் பராமரிக்கும் சுகாதார ஊழியர்கள்
இவர்கள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதுமானது.

முறையாக மாஸ்க் அணிவது எப்படி?
* மாஸ்க்கின் மடிப்புகளை விரித்து, கீழ்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
* மூக்கு, வாய், மோவாய் ஆகியவை முழுமையாக மூடுமாறு மாஸ்க் அணிய வேண்டும்
* மாஸ்க்கின் அனைத்துப் புறங்களிலும் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
* 6 மணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது மாஸ்க் ஈரமான பிறகு, அதை மாற்றிவிட வேண்டும்.
* ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மாஸ்க்கை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
* பயன்படுத்திய மாஸ்க்கை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
* மாஸ்க்கைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது கைகளால் தொடக்கூடாது.
* மாஸ்க்கைக் கழற்றும்போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ள வெளிப்புறத்தைக் கட்டாயம் தொடக்கூடாது.
* மாஸ்க்கைக் கழுத்தில் தொடங்க விடக்கூடாது.
* மாஸ்க்கைக் கழற்றியபிறகு கைகளை சுத்திகரிப்பான்களால், முறையாகக் கழுவ வேண்டும்''.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x