

வைரஸைக் காட்டிலும் மோசமானது பயம் என்று எலோன் மஸ்க், தனது ஊழியர்களிடையே தெரிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் எலோன் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1000-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் தனது ஊழியர்களுக்கு எழுதியுள்ள மெயிலில், ''முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அசவுகரியமாக உணர்ந்தாலோ அலுவலகத்துக்கு வர வேண்டாம். அதைக் கடமையாக நினைக்காதீர்கள். நான் அலுவலகத்துக்கு வருவேன். ஆனால், நீங்கள் அப்படியிருக்க வேண்டியதில்லை. ஏதாவது காரணத்துக்காக நீங்கள் வீட்டில் இருக்க விரும்பினால் எனக்குச் சம்மதமே.
நம்மைச் சுற்றிலும் ஏராளமான வதந்திகள் உலவி வருகின்றன. ஆனால் நம்முடைய டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 56 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.
வைரஸைக் காட்டிலும் மோசமானது பயத்துடன் இருப்பது. பயம் என்பது மனதைக் கொல்லக் கூடியது. அதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். பொதுக் கூட்டங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். குடும்பங்கள் ஒன்றுகூடுவது கூட தவிர்க்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை குறித்து எலோன் மஸ்க் எதுவும் கூறவில்லை. கோவிட்-19 காய்ச்சலால் அமெரிக்காவில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.