

புதுச்சேரி பிராந்தியமான மாஹேவில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
புதுச்சேரி பிராந்தியம் மாஹே பள்ளூர் பகுதியைச் சேர்ந்த 68 வயதுப் பெண், அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு விமானம் நிலையம் மூலம் மாஹே வந்தார்.
அப்போது அவருக்குக் கடுமையான காய்ச்சல், சளி, தலைவலி ஏற்பட்டது. இதனால் மாஹே அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு அவரது ரத்த மாதிரிகள், கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆனது.
இதுகுறித்து மாஹே மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், அந்தப் பெண் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதை சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (மார்ச் 17) உறுதி செய்தார். அந்தப் பெண்ணுக்கு மாஹே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே இந்தியாவில் 126 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவருடன் சேர்த்து இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.