Published : 17 Mar 2020 03:49 PM
Last Updated : 17 Mar 2020 03:49 PM

கரோனா: அச்சப்பட வேண்டியதில்லை; சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை; முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 17) சட்டப்பேரவையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:

"கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. ஆகவே, என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒருவர் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 8 கோடி பேர் தமிழகத்தில் இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால், அனைவருமே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். நானும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கின்றேன்.

நோய் வருவது இயற்கை. அதை யாராலும் தடுக்க முடியாது. ஏதோ ஒரு ரூபத்தில் அவ்வப்போது அனைவருக்கும் நோய் வரும். ஆனால், கரோனா வைரஸ் ஒரு அபாயகரமான நோய் என்று உலக நாடுகளிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 136 நாடுகளில் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகவே, இதை வைத்து தான் அச்சப்பட்டு கொண்டிருக்கிறோம். இதில் அச்சப்பட வேண்டிய தேவையே இல்லை. ஆகவே, சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும், உங்களுக்கு பரிசோதனை வேண்டுமென்றால், உங்களை பரிசோதிப்பதற்கும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அரசு தயாராக இருக்கின்றது.

நாம் சட்டப்பேரவையின் உள்ளே வருகின்ற போது கூட, அனைவரையும் பரிசோதனை செய்து தான் அனுப்புகிறார்கள்.

கரோனா வைரஸ் குறித்து என்னுடைய தலைமையில், மூத்த அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், ரயில்வே துறை, விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநர்களைக் கொண்டு அவ்வப்போது கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்படுகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

மேலும், கரோனா வைரஸ் குறித்து மத்திய அரசால் அளிக்கப்படும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பரிசீலித்து, தமிழக அரசால் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க, அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்ட சிறப்பு பணிக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்தக் குழுவில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அரசு செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றம் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப துறையின் அரசு முதன்மைச் செயலாளர் தொழில் துறையின் அரசு முதன்மை செயலாளர், போக்குவரத்து துறையின் அரசு முதன்மை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைமை இயக்குநர், மருத்துவ கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், தென்னக இரயில்வே பொது மேலாளர், சென்னை விமான நிலைய இயக்குநர், சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர், பொது சுகாதாரத் துறையின் சார்பாக வல்லுநர் ஒருவரும், தனியார் துறை சார்பாக வல்லுநர் ஒருவரும் கொண்ட குழுவினை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இச்சிறப்பு பணிக்குழு, அவ்வப்போது சந்தித்து, அரசு வழங்கும் உத்தரவுகளை சரியான முறையில் அமல்படுத்தப்படுகின்றதா என்பதை தீவிரமாக கண்காணித்து, கரோனா வைரஸ் நோய் தொற்றினை தமிழ்நாட்டில் முழுமையாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x